கர்நாடகா அரசியலில் பல அதிரடி திருப்புமுனைகள் நடந்துவரும் வேளையில், பாஜக தனது புதிய பொதுச்செயலாளரை அறிவித்துள்ளது.
பாஜகவின் செல்வாக்கு மிகுந்த பதவிகளில் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பதவி முக்கியமானது. அந்த பதவியில் இருந்த ராம்லால், ஆர்.எஸ்.எஸ்.க்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அவருக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில இந்திய தொடர்பு தலைவராகவும் பொறுப்பேற்றார்.
பாஜக பொதுச்செயலாளர் பதவிக்கு அக்கட்சியைச் சேர்ந்த பி.எல். சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கிய பிரச்சாரகர். மேலும் தேர்தல் அரசியலில் அனுபவம் மிக்கவர். இதற்கு முன்னர் அவர் தேசிய இணை பொதுச்செயலாளராகவும், அதற்குமுன்பு 8 ஆண்டுகள் கர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளராகவும், 2014ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பாஜக மேலிடப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நியமன அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா நேற்று வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அன்றைய நாளே அவர்களின் பதவிகள் மாற்றப்பட்டுள்ளன.