பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த 28 ஆம் தேதி நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, மகா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் அன்று மாலையே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌதிரி, விஜய் சின்ஹா இருவரும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்கள்.
இதனிடையே பாஜகவை வீழ்த்துவதற்காக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கினார் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணி தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவைகளை பற்றி ஆலோசித்து வரும் நிலையில், நிதிஷ்குமார் தற்போது அதில் இருந்து பாஜக தலைமையில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருப்பது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நிதிஷ்குமாரின் முடிவு குறித்து தேர்தல் வீயூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வரைகூட இந்த புதிய கூட்டணி நீடிக்காது. இதனை நான் உங்களுக்கு எழுதி தருகிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த 6 மாதங்களில் இந்தக் கூட்டணியில் மீண்டும் மாற்றம் நடக்கும். இதனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய கணிப்புப்படி சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தால் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறமுடியாது. அப்படி வெற்றிபெற்றுவிட்டால், நான் இதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.