மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி இரு கட்சிகளும் கடுமையான வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், 15 இடங்களில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் ஒரு குண்டு பாஜக எம்.பியின் வீட்டருகே வீசப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று (18.03.2021) தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் நிலையில், வெடிகுண்டுகள் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்தநிலையில், இதுகுறித்து பேசிய பராக்பூர் போலீஸ் கமிஷனர் அஜய் நந்த், பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவர் மீது ஒருவர் வெடிகுண்டுகளை வீசிக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "இது முழுக்க முழுக்க அரசியல். திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் ஒருவர் மீது ஒருவர் குண்டுகளை வீசி, உள்ளூர் மக்களின் வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.