ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட சில அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறியவர்களிடம் அனாமத்தாக அபராதம் கொடுத்தவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு இது நல்ல செய்திதான்.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும், பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச இருப்பாக 5 ஆயிரம் ரூபாய் வைத்திராதவர்களிடம் இருந்து அபராதமாக வசூலித்த தொகை மட்டும் 1,771 கோடி ரூபாய்.
இந்த விவரம் வெளியானதும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவ்வளவும் ஏழை நடுத்தர மக்களின் பணம். ஒரு வங்கி மட்டும் இவ்வளவு என்றால், சில வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் அனைத்தும் பிடித்தம் செய்த தொகை பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அப்படிப் பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக, முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது, ஏழை நடுத்தர மக்களின் வயிரெறிய பிடித்தம் செய்யப்பட்ட அந்தத் தொகை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் திருப்பித் தரப்படும் என்று கூறியிருக்கிறார்.
வங்கியில் கணக்கு வைத்ததிற்காக மட்டுமே வசூலிக்கப்பட்ட அந்த அபராதத் தொகை திரும்பவும் கிடைத்தாலே, பல குடும்பத்தினர் காங்கிரஸ் அரசை பாராட்டுவார்கள் என்பது மட்டும் உறுதி.