தலைநகர் டெல்லியில் வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி என 3 மாநகராட்சிகள் இருக்கின்றன. பல்வேறு நிர்வாக காரணங்களுக்காகக் கடந்த 2011-ல் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு டெல்லியின் எல்லைகளைப் பிரித்து இந்த 3 மாநகராட்சிகளை உருவாக்கியது. ஆனால், மாநகராட்சிகள் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேறவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தில் சீர்கேடுகள், பணியாளர்களுக்கு முறைப்படி ஊதியம் வழங்காத சூழல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை இந்த மாநகராட்சிகள் எதிர்கொண்டன.
இதுகுறித்து கருத்துக்கள் ஒன்றிய அரசின் உள்துறைக்கு மாநகராட்சிகளின் உயரதிகாரிகள் அனுப்பியபடி இருந்தனர். இந்த நிலையில், பிரிக்கப்பட்ட 3 மாநகராட்சிகளையும் இணைத்து ஒரே மாநகராட்சியாக மாற்றலாம் என ஒன்றிய பாஜக அரசு கடந்தாண்டே முடிவு செய்திருந்தது. அதுகுறித்த ஆலோசனைகளைப் பிரதமர் மோடியிடமிருந்து பெற்றிருந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. கரோனா பரவல்களின் தாக்கத்தில் மாநில அரசு சிக்கியிருந்ததால் அந்த முடிவினை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதேசமயம், இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தபடி இருந்தன. அரசியல் காரணங்களுக்காகவே இந்த முடிவுகளை எடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்தநிலையில், 3 மாநகராட்சிகளை இணைக்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வருவதில் உறுதியாக இருந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதுகுறித்த சட்ட மசோதாவுக்கு கடந்த முறை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலையும் பெற்றார். இந்த சூழலில், தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் மாநகராட்சிகளை இணைக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றச் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த சட்ட மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்கிறார் அமைச்சர் அமித்ஷா.