மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நாடுமுழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், பெண் செவிலியரிடம் நோயாளி ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கடும் காய்ச்சல் பாதிப்பால் நோயாளி ஒருவர் நேற்று இரவு அழைத்து வரப்பட்டார்.
அந்த நோயாளியின் உடல்நலம் மோசமடைந்து இருந்த நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவர், அந்த நோயாளிக்கு ஊசி போட்டு, குளுக்கோஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த நோயாளி, செவிலியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், அவரை தகாத இடங்களில் தொட்டதுடன் ஆபாச வார்த்தைகளிலும் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகிகள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், மருத்துவமனைக்கு வந்த போலீசார், அந்த நோயாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.