பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜயகுமார் சின்ஹா தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் 2017ம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை விட்டு பிரிந்து பாஜக ஆதரவுடன் ஆட்சியை தொடர்ந்தார் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார். 2019 தேர்தலில் பிஜேபி மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. அதில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களில் வென்ற நிலையில் பிஜேபி 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இருந்தும் நிதிஷ்குமாரை முதல்வராக ஆக்கி கூட்டணி கட்சியாக பிஹார் அரசியலில் தொடர்ந்தது பாஜக. இந்நிலையில் முதல்வரை மீறி பாரதிய ஜனதா கட்சி பீகார் மாநிலத்தில் செயல்படுவதாக சமீப காலங்களில் புகார் எழுந்தது. அதோடில்லாமல், பாஜகவை சேர்ந்த சட்டப் பேரவை சபாநாயகர் விஜயகுமார் சின்ஹா ஆளும் அரசுக்கு எதிராகவே கேள்விகள் எழுப்பியது பீகார் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனால் பிரதமர் மோடியுடன் நடக்கும் கூட்டங்களை புறக்கணிக்க ஆரம்பித்த நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் முதல்வர் பதவியில் இருந்தும் விலகிய நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கான அழைப்பு விடுத்ததால் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார் நிதிஷ்குமார். 2019 தேர்தலில் 79 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் சேர்ந்ததால் 124 இடங்களுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்.
இந்நிலையில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி மகாத்பந்தன் கூட்டணி என அழைக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இருந்தும் சபாநாயகராக இருக்கும் பாஜகவின் விஜய் குமார் சின்ஹா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எம்.எல்.ஏ க்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர். எதிர்ப்பு வலுத்த நிலையில் விஜய்குமார் சின்ஹா சபாநாயகர் பதவியில் விலகினார்.