மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக இன்று நாடு முழுவதும் 'பாரத் பந்து'- க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (08/12/2020) காலை தொடங்கிய 'பாரத் பந்த்'- க்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மகாராஷ்ட்ரா மாநிலம் பல்தானா அருகே மல்காபூரில் ரயிலை நிறுத்தி அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் முழு அடைப்பு நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருத்துறைப்பூண்டியில் அனைத்து கட்சியினரின் சாலை மறியலால் திருவாரூர்- நாகை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பஸ் மற்றும் ரயில் போன்ற போக்குவரத்தில் பெரிய பாதிப்பில்லை. டெல்லியில் 13 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை (09/12/2020) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் போராட்டம் தொடர்கிறது.
நாடு முழுவதும் 'பாரத் பந்த்' நடைபெற்று வரும் நிலையில் ஹரியானா, பீகார், டெல்லி, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.