பெங்களூருவில் 52 ஆயிரத்துக்கு ஒரே நபர் மதுபானம் வாங்கிய பில் இணையத்தில் வைரலான நிலையில், அந்த குறிப்பிட்ட மதுக்கடை நிர்வாகம் மீது கர்நாடக கலால் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது ஒருசில இடங்களில் இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி மற்றும் அசாமில் மதுக் கடைகளை திறக்க அம்மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.
அந்த வகையில் கர்நாடகாவில் 40 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல், வணிக வளாகங்களில் அல்லாமல் தனியாக இயங்கும் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை முதலே பல்வேறு மதுக்கடைகளுக்கு வெளியே கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அந்தவகையில் பெங்களூருவில் உள்ள ஒரு கடையில் ஒரே நபர் ரூ.52,800க்கு மதுபானம் வாங்கிய ரசீது வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை மீறி ஒரே நபருக்கு அதிக மதுபானம் விற்றதாக அந்த கடை நிர்வாகத்தின் மீது கர்நாடக கலால் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட வரம்பான 2.3 லிட்டர் மதுவுக்கு மாறாக 17.4 லிட்டர் மதுவும், 18 லிட்டர் பீருக்கு மாறாக 35 லிட்டர் பீரும் விற்கப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் கொடுத்துள்ள விளக்கத்தில், 8 பேர் கொண்ட குழு இந்த மதுபானங்களை வாங்கியதாகவும், ஆனால் ஒரே டெபிட் கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தியதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.