பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கரோனாவால் இதுவரை 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா இருப்பதாகக் கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்த கூகுள் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "எங்கள் பெங்களூரு அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர் கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அறிகுறிகளைக் கண்டறிவதற்கு முன்பு அவர் சில மணி நேரம் எங்கள் பெங்களூரு அலுவலகத்திலிருந்தார். பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெங்களூரு அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை நாளை முதல் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளது.