
காவல் நிலையத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் கல்பெட்டா காவல் நிலையத்தில், சிறுமி ஒருவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் தீவிரமாக தேடி வந்த போலீசார், நேற்று மாலை கோழிக்கோட்டில் வைத்து கோகுல் (18) என்ற இளைஞரையும் அந்த சிறுமியையும் பிடித்தனர்.
அதன் பின்னர், அவர்களை கோழிக்கோட்டில் இருந்து கல்பெட்டா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கல்பெட்டாவிற்கு அழைத்து வரப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுமி, அரசு நடத்தும் பெண்கள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரவு நேரத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்த முடியாத காரணத்தினால், விசாரணை நடத்துவதற்காக கோகுல் காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், இன்று கழிவறையில் கோகுல் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட போலீஸ், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் கழிவறைக்குச் சென்ற கோகுல், தனது சட்டையைப் பயன்படுத்தி தூக்கில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.