வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசியை கருத்தில்கொண்டு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இந்தக் கோரிக்கை குறித்து நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என கூறிய வங்கி ஊழியர் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன.
இதன்படி ஜனவரி 31-ந் தேதி, பிப்ரவரி 1-ந் தேதி, மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர். நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், திட்டமிட்டபடி வருகிற 31-ந் தேதி மற்றும் பிப்ரவரி 1-ந் தேதி 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை, தனியார்துறை, அயல்நாட்டு வங்கிகள் என எல்லா வங்கிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.