போலி ஆதார்கார்டுகளுடன் சிக்கிய வங்காளதேச இளைஞர்கள்!
போலியான ஆதார்கார்டுகளுடன் சிக்கிய வங்காளதேச இளைஞர்கள் மூவரை கைதுசெய்துள்ள காவல்துறை, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ ரயில்நிலையம் அருகே மூன்று இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியுள்ளனர். இவர்களை அழைத்து விசாரித்த காவல்துறை, முறையான பதில் கிடைக்காததால் தீவிரவாத தடுப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளது.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், போலியான முகவரி மற்றும் பெயர்களுடன் கூடிய ஆதார் அட்டை வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. முகமது இம்ரான், ரஷீதுதீன் மற்றும் முகமது ஃபிர்தாவுஸ் ஆகிய மூவரும் வங்காளதேசம் ஜெஸ்ஸூர் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அப்துல்லா அல் மமூன் என்ற இளைஞர் முஷாபர்நகரில் கைது செய்யப்பட்டார். இவர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தங்குமிடம் மற்றும் போலியான சான்றிதழ்களை தயார்செய்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட இளைஞர்கள் மற்றும் அப்துல்லா இடையே தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கு விட்டுள்ளதாக, தீவிரவாத தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
- ச.ப.மதிவாணன்