பக்ரீத் பண்டிகையை வருகின்ற திங்கட்கிழமை கொண்டாட இந்தியா முழுவதும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் கால்நடை துறை ஒரு உத்தரவை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியிருக்கிறது.
அந்த உத்தரவில்,
பலியிடப்படும் விலங்குகளில், பசு மாடு, மற்ற விலங்குகள் எக்காரணத்தைக் கொண்டும் கொல்லக் கூடாது. ஒட்டகத்தை எக்காரணத்தைக் கொண்டும் கொல்லக் கூடாது. இதுதொடர்பாக கல்கத்தா உயர் நீதிமன்றமும், சுப்ரீம் கோர்ட்டும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. கொல்லப்படும் மற்ற விலங்குகள் கூட உணவுக்காக கொல்லப்படுகிறது என்றால், அதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
மசூதிகளில் அல்லது கிராமப்புறங்களில், நகர்ப்புறங்களில் பொது இடங்களில் வைத்து விலங்குகளை வெட்டக்கூடாது. விலங்குகள் வெட்டுவதற்கு முன்பு அந்த விலங்கு கருவுற்றதாக இருக்கக் கூடாது. கன்று ஈன்று மூன்று மாதங்கள் ஆன விலங்குகளை வெட்டக்கூடாது. விலங்கு வெட்டப்படுவதற்கு முன்பு கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சான்றிதழ் வாங்கிய பிறகுதான் வெட்டப்படவேண்டும். அதற்கென நியமிக்கப்பட்ட வெட்டு கூடங்களில்தான் விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் இந்த விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மத்திய விலங்குகள் நலவாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறுபவர்களை மத்திய அரசின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.