கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயில் குளத்தில் கடந்த 70 ஆண்டுகளாக வசித்துவரும் 'பபியா' என்னும் முதலை, முதன்முறையாகக் கோயில் வளாகத்துக்குள் நுழைந்ததாக அக்கோயிலின் தலைமை பூசாரியான சந்திரபிரகாஷ் நம்பீசன் தெரிவித்துள்ளார்.
காசர்கோடு மாவட்டத்தின் அனந்தபுரா என்னும் கிராமத்தில் தொன்மை வாய்ந்த அனந்த பத்மநாபசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் குளத்தில் கடந்த 70 ஆண்டுகளாக 'பபியா' எனும் முதலை வசித்துவருகிறது. பக்தர்கள் கொடுக்கும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்துவரும் இந்த முதலை கடந்த 70 ஆண்டுகளில் முதன்முறையாகக் கோயில் வளாகத்திற்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சிகால பூஜையின் போது வழங்கப்படும் அவல் மற்றும் வெல்லம் கலந்த சாதத்தை மட்டுமே சாப்பிட்டு குளத்தில் வாழ்ந்து வந்த பபியா, முதன்முறையாகக் கோயில் வளாகத்திற்குள் வந்து சிறிதுநேரம் உலாவிவிட்டுச் சென்றதாகத் தலைமை பூசாரியான சந்திரபிரகாஷ் நம்பீசன் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுக்காலத்தில் இந்த முதலையால் யாருக்கும் எவ்விதத் தீங்கும் நேரவில்லை எனக் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.