Skip to main content

வாடகை வீட்டில் இருந்து கொண்டு ஓனர் சொல்வதை கேட்பதில்லை; ஆளுநரை விமர்சித்த மதுரை எம்.பி

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

su venkatesan

 

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் நேற்று முன்தினம் மக்களவையில் எதிரொலித்தது. அப்போது, நீட் விலக்கு மசோதா திரும்ப அனுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பிக்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

அதனைத்தொடர்ந்து நேற்று காலை, மாநிலங்களவை கூடியதும் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள்,  நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரினார். அதற்கு சபாநாயகர் வெங்கையா நாயுடு அனுமதி மறுக்க திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதன்தொடர்ச்சியாக திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

இந்தநிலையில் நேற்று மாலை மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழக ஆளுநர் ரவி மக்களாட்சியினுடைய தத்துவத்தை அதிகாரத்தைக் குறைக்க முயலுவதாகவும், அவரை திரும்ப பெறவேண்டும் எனவும் வலியறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி பேசியது வருமாறு; மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள், உரிமைகளையும் கடமைகளையும் பற்றிப் பேசியிருக்கிறார். அது சார்ந்த என்னுடைய கருத்துக்களை இங்கே முன்வைக்கலாம் என நினைக்கிறேன். நான் வாடகை வீட்டிலேயே குடியிருப்பவன். எனது வீட்டின் உரிமையாளருக்கு உடமைகளும், கடமைகளும் உண்டு. என்னுடைய வீட்டின் நிலமும், கட்டிடமும் அவருக்கு சொந்தமானது. அவரது உரிமையிலே நான் தலையிடுவதில்லை, மதிக்கிறேன். என்னைப்போலவே தமிழ்நாட்டில் ஒருவர் வாடகை வீட்டிலே குடியிருக்கிறார். அவர் வாடகை செலுத்துவதில்லை. சட்டம் அவருக்கு அந்த சலுகையை வழங்கியிருக்கிறது. அனால் அவர், தனது உரிமையாளரின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறார். உரிமையாளரின் உரிமையை நிராகரிக்கிறார். உரிமையாளர் கொடுத்த தீர்மானத்தை திருப்பி அனுப்புகிறார். நான் யாரை பற்றிச் சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

 

குற்றவாளிகளுடைய தண்டனையைக் குறைக்கவும், ரத்து செய்யவும் அதிகாரம் படைத்த ஒருவர், மக்களாட்சியினுடைய தத்துவத்தை அதிகாரத்தைக் குறைக்கவும், இரத்து செய்யவும் துணிவது ஜனநாயகத்திற்கான அவமானம். ஆறரைக்கோடி தமிழர்களுடைய, தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் தீர்மானம் என சொல்லுவது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து. இதே அவையில் நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி பலமுறை நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆனால் எங்கள் குரலுக்கு நீங்கள் செவிபடுப்பதேயில்லை. ஆனாலும் தமிழகத்தினுடைய குரல் ஓயப்போவதில்லை. டிசம்பர் மாதம் காசியிலே பேசிய பிரதமர் அவர்கள் ஒரு வார்த்தையை குறிப்பிட்டார். "காசியை வெறும் வார்த்தைகளால் புரிந்துகொள்ள முடியாது. விழிப்புணர்வே அங்கு வாழ்க்கை. அன்பே அங்கு பாரம்பரியம்" என்றார். அவருடைய உரையாவே இந்த அவையில் மீண்டும் நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். தமிழகத்தை வெறும் வரைபடத்தை பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. மூவாயிரம் ஆண்டு முற்போக்கு சிந்தனையும், சமத்துவ சிந்தனையும், சமூக நீதி தத்துவமும் கொண்ட தமிழகத்தினுடைய குரல், மீண்டும் மீண்டும் இந்த அவையிலே எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

 

நான் மீண்டும் இங்கே அழுத்தமாக சொல்லுவது, நாங்கள் பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலே கூட  மாநிலத்தினுடைய பிரதிநிதிகள் டெல்லி அதிகாரிகளை பார்க்க 10 நாள் காத்திருந்ததாக கேள்விப்பட்டதில்லை. ஆனால் நாங்கள் காத்திருந்து பார்த்து நீட் தேர்வை இரத்து செய்யகோரிய மசோதாவுக்கான மனுவை கொடுத்தோம். மனுவை கொடுப்பதாலேயே நாங்கள் அதிகாரமற்றவர்களாக, நீங்கள் அதிகாரம் படைத்தவர்களாக மாறிவிடுவதில்லை. ஒன்றியமும் மாநிலமும் சம அதிகாரம் கொண்ட அமைப்புகளென்று அரசியல் சாசன சட்டம் சொல்கிறது. அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். எங்களின் குரல் ஒரு மாநிலத்தின் குரலல்ல.  இந்திய மாநிலங்களின் குரல். இந்திய அரசியல் சாசனத்தின் குரல். இந்த குரலுக்கு செவிமடுங்கள். செவிமடுக்க மறுக்கிற நபரை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

 

  

சார்ந்த செய்திகள்