உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பை நிராகரித்திருந்தனர். இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியும் பங்கேற்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை சமாஜ்வாதி கட்சி புறக்கணித்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.