இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கரோனா பரவல் தொடங்கியது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கரோனா எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று (04.04.2021) ஒரேநாளில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 588 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும், மஹாராஷ்ட்ராவில் நேற்று ஒரேநாளில் 57 ஆயிரத்து 74 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகிவுள்ளது. ஒரு மாநிலத்தில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா உறுதியாவது இதுவே முதல்முறை. டெல்லியிலும் நேற்று ஒரேநாளில் 4 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே நேற்று, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் காணொளி மூலமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர், மத்திய அமைச்சரவைச் செயலாளர் மற்றும் சுகாதாரச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் கரோனா தொற்றின் தீவிரம், கரோனா தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தநிலையில் பிரதமர் மோடி, வரும் 8 ஆம் தேதி கரோனா பரவல் தொடர்பாகவும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை கரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாநிலங்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.