புதுச்சேரி கோரிமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் இனியன். உதவி ஆய்வாளராக இருந்த இவர் சமீபத்தில் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் இவரது பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியாக முகநூல் கணக்கு தொடங்கியுள்ளார். இந்த கணக்கில் இருந்து ஆய்வாளரின் நண்பர்களையும் இணைத்துள்ளார். தொடர்ந்து அவர்களுக்கு மெஸ்சஞ்சர் மூலம் நலம் விசாரித்த நிலையில், அவர்களும் பதில் அளித்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த நபர், ஆய்வாளரின் நண்பர்களிடம் போன் நம்பரை பெற்று, தனது போன் நம்பரை மாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இப்படியே பேசிய அந்த நபர் அவர்களிடம், மெல்ல தனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என தெரிவித்து மெஸ்சஞ்சர் மூலம் பணம் கேட்டுள்ளார்.
இதில் சிலர் இனியனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? திடீரென பணம் கேட்கிறீர்களே? என விசாரித்துள்ளனர். இதை கேட்டு, அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர் இனியனுக்கு பின்னர் தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு பணம் கேட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆய்வாளர் இனியன் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கியது யார்? எதற்காக தொடங்கப்பட்டது? பணம் பறிக்க மட்டுமா? அல்லது வேறு காரணத்துக்காகவா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.