இந்தியாவில் கரோனா பரவல் சில மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகரித்து வருவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், ஜனவரி 10 முதல் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து நேற்று, பயோலொஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கும், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கும் இந்தியாவில் அவசர கால அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தசூழலில் பயோலொஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்துவது தொடர்பான மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்களுக்கு அத்தடுப்பூசிகளே பூஸ்டர் டோஸ்களாக செலுத்தப்படவுள்ள நிலையில், பயோலொஜிக்கல் இ நிறுவன பரிசோதனை வெற்றிபெற்றால், கோர்பேவாக்ஸ் தடுப்பூசி பூஸ்டராக செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.