புகழ்பெற்ற எழுத்தாளர் காஞ்சா ஐலய்யா மீது தாக்குதல்!
தலித் சிந்தனையாளரும், எழுத்தாளருமான காஞ்சா ஐலய்யாவுக்கு தொலைபேசி வழியாக மிரட்டல்கள் வருவதாகவும், அவரது காரின் மீது கல்வீச்சு தாக்குதலில் சிலர் ஈடுபட்டதாகவும் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
புகழ்பெற்ற ‘நான் ஏன் இந்து அல்ல’ என்ற புத்தகத்தை எழுதியவர் காஞ்சா ஐலய்யா. இவர் தான் எழுதிய புத்தகமான இந்து இந்தியா என்ற புத்தகத்தில் ‘வைசியர்’ சமுதாயம் குறித்து ‘சமூக கடத்தல்காரர்கள்’ என விமர்சித்து எழுதியிருந்தார். இது அந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தைச் சேர்ந்தவரும், தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி.யுமான வெங்கடேஷ் காஞ்சா ஐலய்யாவை பொதுஇடத்தில் வைத்து தூக்கில் இடவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த விவகாரத்தால் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதால், அக்டோபர் 4ஆம் தேதிவரை தன்னைத்தானே வீட்டுச்சிறையில் அடைத்துக்கொள்வதாக காஞ்சா தெரிவித்துள்ளார்.
காஞ்சா ஐலய்யாவின் இந்த புத்தகத்தை தடை செய்யக்கோரி, ஆரிய வைசிய மகாசபை உள்ளிட்ட அதே சமுதாயத்தைச் சேர்ந்த பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து காஞ்சா ஐலய்யாவிற்கு ஆதரவாக பேசும் டி-மாஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜான் வெஸ்லி, ‘கருத்துச் சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்திலேயே கொடுக்கப்பட்ட உரிமை. அந்தப் புத்தகத்தில் காஞ்சா கடந்த 3,500 ஆண்டுகளாக இந்திய சாதிய கட்டமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து தான் எழுதியிருக்கிறார். அதைத் தடை செய்யக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்