நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற எல்.ஐ.சியின் பங்குகள் விறக்கப்படுவது குறித்த முடிவுக்கு எதிராக எல்.ஐ.சி யின் மூன்று பெரிய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது, எல்.ஐ.சி, ஐ.டி.பி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. மத்திய அரசுக்கான நிதி திரட்டும் நடவடிக்கையாக இந்த விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக எல்.ஐ.சி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி திங்களன்று மதிய உணவு இடைவேளையின் போது தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தும் எனவும், அதன் பின்னர் செவ்வாயன்று ஒரு மணி நேர எதிர்ப்பு வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.