உத்தர பிரதேசம் மாநிலம், கிரோர் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த 26 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக 17 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அந்த சிறுமிக்கு மருத்துவர்கள் இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சிறுமியை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சிறுமியின் குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அதற்குள் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு, மருத்துவமனை ஊழியர்கள், அந்த சிறுமியின் உடலை மருத்துவமனைக்கு வெளியே இருந்த இருசக்கர வாகனத்தில் அமரவைத்து விட்டு அங்கு இருந்து சென்றுவிட்டனர். இருசக்கர வாகனத்தில் அமரவைக்கப்பட்ட அந்த சிறுமியின் உடலை அவரது உறவினர் ஒருவர் பிடித்த படியேயான ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து, சம்மந்தப்பட்ட அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், “தவறான சிகிச்சையின் காரணமாக தான் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. வேறு ஒரு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யாமல் மருத்துவமனை ஊழியர்கள், சிறுமியை வெளியே கொண்டு வந்து போட்டு விட்டு தப்பி சென்றுவிட்டனர்” என்று குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, உத்தர பிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையை சீல் வைக்கவும், அதன் உரிமத்தை ரத்து செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.