நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்க போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி அசாம் வந்தால், அவருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என அசாம் மாணவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஜனவரி 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கஉள்ளார். இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க வரும் பிரதமருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அசாம் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல்முறையாக அசாம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக பிரம்மாண்ட போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.