சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்தபோது அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
சமீபத்தில் சத்யபால் மாலிக், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மை காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள்.
சாலை மார்க்கமாக அவர்கள் சென்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும், அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனப் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிஐ சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மீண்டும் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அப்போது, சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காகத்தான் பழைய வழக்கில் மீண்டும் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது என்று பலரும் கூறினர். இருப்பினும் சத்யபால் மாலிக் கடந்த 28 ஆம் தேதி சிபிஐயிடம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (17.05.2023) சத்யபால் மாலிக்கின் உதவியாராக இருந்த சுனக்பாலி என்பவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 11 இடங்களில் நடைபெற்றது. மேலும் ஜம்முவில் உள்ள சுனக்பாலின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆடிட்டர்களான சஞ்சய் நாரங், வீரேந்திர சிங் ராணா, கன்வர் சிங் ராணா, பிரியங்கா சௌத்ரி, அனிதா ஆகியோர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடைபெற்றது.