தனிநபர் வருவாயில் வங்கதேசம், இந்தியாவை நெருங்கிவிட்டது என்று சர்வதேச நிதியம் தெரிவித்ததை சுட்டிக்காட்டி மத்திய அரசைக் கிண்டலாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
கரோனா தடுப்பு, பொருளாதார சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. அந்தவகையில் தனிநபர் வருவாயில் வங்கதேசம், இந்தியாவை நெருங்கிவிட்டது என்று சர்வதேச நிதியம் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். உலக நாடுகளின் தனிநபர் வருமானம் குறித்த அறிக்கை ஒன்றை சர்வதேச நிதியம் அண்மையில் வெளியிட்டது.
இதில், கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும், ஜிடிபி மற்றும் தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை நெருங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச நிதியத்தின் இந்த தகவலைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவின் வெறுப்பு நிரம்பிய கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தப் போகிறது" என விமர்சித்துள்ளார்.