சமீப காலமாக புராண கதைகளில் எழுதப்பட்ட பல விஷயங்களை நவீன அறிவியலுடன் இணைத்து பேசும் போக்கு அதிகரித்து வருகிறது. முக்கியமாக அரசியல் தலைவர்கள் பலர் இதுபோல தற்போது பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், அக்கட்சியை சேர்ந்த முதல்வர்கள் என புராதான காலத்தை நவீன அறிவியலோடு தொடர்புப்படுத்தி தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
சமீபத்தில் அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ திலிப் குமார் அங்கு நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அதில் அவர் இசை மற்றும் நடனம் ஆகியவை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்து ஆடியதால் பசுக்கள் அதிகம் பால் கறந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதை கேட்டு பலர் அதிர்ச்சியடைந்தனர். அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது குஜராத்தை சேர்ந்த ஒரு தன்னார்வ நிறுவனம் செய்த ஆராய்ச்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.