அசாம் மாநில காவல்துறையில் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜூன்மோனி ரபா (30). இவர் பணிபுரிந்த அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் புகார்களை விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். மேலும், குற்றவாளிகளை துணிச்சலுடன் பிடித்து நீதிமன்றம் மூலம் தண்டனைகளை வாங்கிக்கொடுத்து வந்துள்ளார். இவர், தனது வருங்கால கணவரையே ஒரு மோசடி வழக்கில் கைது செய்துள்ளார். இவரின் இந்த நேர்மை மற்றும் துணிச்சலான நடவடிக்கைகளின் காரணமாக அசாம் மாநில மக்களிடத்திலும், காவல்துறையினர் மத்தியிலும் இவர் ‘பெண் சிங்கம்’ என அழைக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்துள்ளது. அதன் காரணமாக இவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில், ஜூன்மோனி ரபா லஞ்சம் பெற்றதாக ஒரு புகார் எழுந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவர் வீட்டை சோதனை செய்துள்ளனர். அதில் ரூ. 1 லட்சம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை ஜூன்மோனி ரபா, காரில் அசாம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையில் எதிரே வந்த ஒரு லாரி இவரின் கார் மீது மோதியுள்ளது. இதில் ஜூன்மோனி ரபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து அறிந்த அசாம் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்டமாக ஜூன்மோனி ரபா மீது மோதிய லாரியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த லாரி உத்தரப் பிரதேசம் மாநில பதிவெண் கொண்ட லாரி என்பது தெரியவந்துள்ளது. மேலும், விபத்து ஏற்பட்டதும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியுள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜூன்மோனி ரபாவின் உறவினர்கள், ‘வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு முறையான கணக்கு உள்ளது. ஆனால் அதனை போலீஸார் ஏற்கவில்லை. வேண்டுமென்றே ஜூன்மோனி ரபாவின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது’ என்று தெரிவிக்கின்றனர்.