மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல், கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இம்மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று (01.04.2021) நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த சிலமணி நேரங்கள் கழித்து, அசாமைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் இருப்பதைப் போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் அந்தப் பதிவில் அவர், "பதர்கண்டி பாஜக வேட்பாளர் கிருஷ்ணெந்து பால் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சூழ்நிலை பதற்றமாகியுள்ளது" என கூறியிருந்தார்.
இதுபெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம், "வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு சென்ற தேர்தல் ஆணையத்தின் கார் பழுதாகிவிட்டதாகவும், அதனால் அதிகாரிகள் லிஃப்ட் கேட்டு இன்னொரு காரில் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு சென்றார்கள்” எனக் கூறியுள்ளது. மேலும், “அந்தக் கார் பாஜக வேட்பாளரின் மனைவிக்கு சொந்தமானது என்பது பிறகுதான் தெரியவந்தது” எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, 4 தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது. குறிப்பிட்ட வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடியில், மறுவாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.