கடந்த மே மாதம் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி. முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ஜெகன்.
அந்த வகையில் அவரது முக்கிய தேர்தல் வாக்குறுதியான, இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பது தொடர்பாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ஒரே நாளில் ஆந்திராவில் 1,26, 728 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 11,158 கிராம செயலகமும், 110 நகராட்சிகளில் 3809 வார்டு செயலகங்களும் அமைக்கப்பட்டு, இதில் பணிபுரிய அலுவலர்களும் வேளைக்கு எடுக்கப்பட்டனர்.
இந்த பணிகளுக்கு சுமார் 22,69,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில், 1,98,164 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 1,26,728 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக இறுதிசெய்யப்பட்டனர். இதையடுத்து விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, நியமன ஆணைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நாட்டிலேயே முதன்முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு ஆந்திராவில் ஒரே நாளில் 1,26, 728 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.