வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு அதிருப்தி எம்.எல்.ஏ. க்களுடன் ஒன்றிணைந்து மாநிலத்திற்காக பணியாற்றுவோம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் அம்மாநில ஆட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரை திங்கட்கிழமை நேரில் சந்தித்து பேசினார் சச்சின் பைலட். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டிற்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "எம்எல்ஏக்கள் அதிருப்தியடைவது இயல்பான ஒன்றுதான். அவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரிந்து சென்று தனித்து இருந்தனர்.
நாட்டிற்கும், மக்களுக்கும், மாநிலத்திற்கும் சேவை செய்ய வேண்டுமென்றால், ஜனநாயகத்தை காக்க வேண்டுமென்றால் இதுபோன்ற விஷயங்களைப் பொறுத்து கொள்ளதான் வேண்டும் என அவர்களிடம் விளக்கியுள்ளோம். எங்கள் நண்பர்கள் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். நாங்கள் ஒன்றிணைந்து, எங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு மாநிலத்திற்காக பணியாற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.