டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார்.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று (10.05.2024) இந்த வழக்கு விசாராணைக்கு வந்தது. அப்போது “ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங் வாதிட்டார். இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது அவருடைய கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் தீர்ப்பு நகல் திகார் சிறையை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவுக்குள் கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது திகார் சிறையிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிறையில் இருந்து வந்த அவருக்கு வெளியே காத்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்தபடி கெஜ்ரிவால் காரில் புறப்பட்டார்.