இந்தியாவில் திவால் சட்டம் மற்றும் சர்பாசி சட்டம், கடன் மீட்பு தீர்ப்பாயம், அமலாக்கத்துறை மற்றும் லோக் அதாலத் ஆகியவற்றின் உதவியோடு வங்கிகள் வாராக்கடன்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் வாராக்கடன் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘‘நாடுமுழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு வாராக்கடன் என்பது பெரும் சுமையாக உள்ளது. இந்த கடனை வசூலிக்க பல வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடன் பெற்று திருப்பித்தராதவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த முயற்சியால் இதுவரை 80 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 70 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்படவுள்ளது. கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது இதுவரை 66 வழக்குகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த தொகை கண்டிப்பாக விரைவில் வசூலாகும்’’ எனக் கூறினார்.