கேரள போக்குவரத்துக் காவல்துறையில் செயற்கை நுண்ணறிவுத்திறனை அந்த மாநில அரசு கொண்டுவந்திருக்கிறது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாநகரில் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் இல்லாமல் செல்வோரையும், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் செயற்கை நுண்ணறிவுத்திறன் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை சோதனை முயற்சியாக திருவனந்தபுர மாநகரத்தின் சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் இல்லாமல் செல்வோரையும், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் எளிதில் அடையாளம் காண முடியுமென கேரள காவல்துறைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரம் போக்குவரத்துக் காவல் இணை ஆணையர் ராஜீவ் புத்தலாத் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவின் மூலம் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கும் நுட்பம் ஏற்கனவே வயலாறு, வடக்கஞ்சேரி, கோழிக்கோடு பகுதிகளில் நடைமுறையில் இருக்கிறது. இதில் 98 சதவிகிதம் வெற்றி கிடைத்துள்ளது.
இதன் மூலம் ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் இல்லாமல் செல்பவர்கள் ஆகியோரின் வண்டிப் பதிவு எண்ணை செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேரின் வழிகாட்டுதலின்படி கேமரா, துல்லியமாக படம் எடுத்துவிடும்.
அதை சம்பந்தப்பட்ட பகுதிக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பி விடுவோம். அவர்களிடம் இருந்து முகவரி பெற்று, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராத அறிவிப்பாணை கொடுக்கப்படும். இதன்மூலம் போலீஸார் பார்க்கும்போது மட்டுமே ஹெல்மெட் போடுவதும், சீட்பெல்ட் போடும் பழக்கமும் முடிவுக்கு வந்து எப்போதுமே அவர்கள் சாலை பாதுகாப்பிலும், தங்கள் உயிர் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தும் சூழல் ஏற்படும்” என்றார்.
கேமராவில் செயற்கை நுண்ணறிவை கொண்டுவரும் திட்டத்தை, டி.சி.எஸ் நிறுவனத்தின் ரோபோடிக் சார்ந்த பிரிவின் உலகளாவியத் தலைவராக இருக்கும் ரோஷி ஜான், சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து இதைக் குறித்து விளக்கியுள்ளார். அதன்பின் தற்போது இது சோதனை அடிப்படையில் முயற்சி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.