தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதனையடுத்து, தெலங்கானா மாநில முதலமைச்சராக, தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்திருந்தார். அதன்படி, மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் (07-12-23) பதவியேற்றார். அவருடன் சேர்த்து, 10 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இந்த நிலையில், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (09-12-23) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது, தெலுங்கானா சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஓவைசி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, தற்காலிக சபாநாயகரான அக்பருதீன் ஓவைசிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தெலுங்கானா சட்டமன்றத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்று வந்தது. இதில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், அக்பருதீன் ஓவைசியை தற்காலிக சபாநாயகராக நியமித்ததை எதிர்த்து பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பை புறக்கணித்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி, “தெலுங்கானா சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டுள்ளதை பா.ஜ.க எதிர்க்கிறது. தற்காலிக சபாநாயகர் முன்பு பதவியேற்பதை பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்துள்ளனர். சபாநாயகர் நியமிக்கப்பட்ட பிறகுதான் எங்கள் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பார்கள்” என்று கூறினார்.