தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக் கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சனாதன தர்மத்திற்கு திமுக தலைவர்கள் கூறிய கருத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், “ஆணவ கூட்டணி தலைவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராகப் பேசி வருவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கூட்டணிக் கட்சியினர் கூறிய கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது. இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டமான மும்பையில், சனாதன தர்மத்திற்கு எதிராக ஒன்றன்பின் ஒன்றாக அனைவரும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது போல் தெரிகிறது.
ஆனால், ராகுல் காந்தியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் இது பற்றி கருத்து கூறாமல் அமைதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் பற்றி கூறிய கருத்துகளை ராகுல் காந்தி ஆதரிக்கிறாரா? இது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய பேச்சு என்று தெரியவில்லையா? இது வெறுப்பு பேச்சு என்று ராகுல் காந்தி கருதவில்லையா? இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டாமா? இது வெறுப்பு பேச்சு என்று ராகுல் காந்தி கருதினால், மவுனத்தை கலைத்துவிட்டு அவர் என்ன நினைக்கிறார் என்று தெளிவுபடுத்த வேண்டும். ஏன் மெளனமாக இருக்கிறார்?
அவரது இயலாமைக்கு காரணம் என்ன? ஒரு விஷயத்தை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சனாதன தர்மத்தின் அவமதிப்பை இந்தியா பொறுத்துக் கொள்ளாது. சனாதன தர்மத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறிய கருத்துகள், அவர்களது கூட்டணிக்கு அவமரியாதை அளித்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி நாளில், இந்தியா கூட்டணியினர் மனநிலையை கடவுள் மாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.” என்று கூறினார்.