திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் திருப்பதி மலைப்பாதையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தனது பெற்றோருடன் யாத்திரை சென்ற 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தையடுத்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொடர்ந்து வனத்துறை சார்பிலும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத் திருப்பதி மலைப் பாதையில் நடமாடிய சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு வந்தன.
அந்த வகையில் வனத்துறை சார்பில் திருப்பதி மலைப் பாதையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த கூண்டுகளின் மூலம் இதுவரை 5 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன. இந்நிலையில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் 6 வது சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. பிடிபட்ட சிறுத்தையை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக பிடிபட்ட 5 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. மேலும் இரு சிறுத்தைகள் திருப்பதி உயிரியல் பூங்காவில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.