மத்திய அரசு ஊழியர்கள் நாளை (28/03/2022) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், அவசரகால செயல்பாடுகளை போல 24 மணி நேரமும் மின் விநியோகத்தை உறுதிச் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மின்சார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக்கூடாது, மின்சாரத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து நாட்டின் முக்கிய தொழிற்சங்கத்தினர், நாளையும் (28/03/2022) நாளை மறுதினமும் (29/03/2022) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மின்சாரப் பராமரிப்பு குறித்து மத்திய மின்சார அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால், மின்சேவை பாதிக்காத வகையில், அவசர காலத்தில் செயல்படுவது போல, கூடுதல் பணியாளர்களை நியமித்தாவது 24 மணி நேர மின் விநியோகத்தை உறுதிச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், ரயில்வே, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அடிப்படை சேவை மையங்களில் மின் தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதிச் செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மின் தட்டுப்பாடு குறித்த புகார்களைத் தீர்க்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை இயக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.