மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி, தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் எம்.எல்.ஏக்கள், தலைமை செயலாளர், அரசு துறை செயலாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கலைஞர் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக சட்டப்பேரவை கட்டிடத்தின் மேலுள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது.
அஞ்சலி நிகழ்வுக்கு பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, " தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை அமைக்கப்படும் என்றும், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பிரதான சாலைகளுக்கு கலைஞரின் பெயர் சூட்டப்படும் என்றும் கூறிய நாராயணசாமி புதுச்சேரி அரசு அறிவித்த 3 நாட்கள் அரசு முறை துக்கம் 7 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.