அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சிக்கித்தவிக்கும் 14,800 இந்தியர்களை மீட்கும் பணியில் நாளை முதல் ஏர் இந்தியா ஈடுபட உள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் விமானச் சேவைகளை முடக்கியுள்ள சூழலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். அந்த வகையில், சுற்றுலா மற்றும் பணிநிமித்தமாக அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற சுமார் 14,800 இந்தியர்கள் அங்கேயே சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்துவந்த நிலையில், நாளை முதல் ஏர் இந்தியா விமானம் மூலம் இவர்களை மீட்கும் பணி தொடங்க உள்ளது.
முதல் நாளான நாளை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 9 நாடுகளுக்கு 10 விமானங்கள் புறப்படுகின்றன. இந்த விமானங்கள் மூலம் கொச்சி, கோழிக்கோடு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத் நகருக்கு சுமார் 2,300 இந்தியர்கள் அழைத்துவரப்பட உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 7 நாட்களில் 64 விமானங்கள் மூலம் 14,800 பேர் மீட்கப்பட உள்ளனர். இந்தியாவுக்கு வரும் இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதேபோல இந்தியா திரும்பும் இவர்கள், தங்களது சொந்தச் செலவில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தச் சோதனையில் யாருக்காவது வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக விமானத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானக் கட்டணச் செலவைப் பயணிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கக் கடற்படையைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் நேற்று முன்தினம் மும்பையிலிருந்து புறப்பட்டது, குறிப்பிடத்தக்கது.