தொடர் நஷ்டங்கள் மற்றும் கடன் தொல்லைகளில் சிக்கி தவித்து வரும் நிலையில், மேலுமொரு தொழிலில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியேறுவதாக அனில் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் கடன் வழங்கும் சேவையிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார். ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் அளவுள்ள பங்குகளை வைத்துள்ளது ரிலையன்ஸ் கேபிடல்.
இந்நிலையில் ரிலையன்ஸ் கேபிடல் ஆண்டு கூட்டத்தில் பேசிய அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களை சீரமைக்கும் பணி வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவித்தார். இந்த சீரமைப்பு மூலம் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்துக்கு உள்ள கடன் சுமை ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்குக் குறையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதுவரை கடந்த 4 மாதங்களில் ரிலையன்ஸ் குழுமம் ரூ. 35 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தியதாகவும் , அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் ரூ.15 ஆயிரம் கோடியை செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடி கடனைத் திரும்ப செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அப்போது பேசிய அவர், ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் கடன் வழங்கும் சேவையிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் இன்சூரன்ஸ் துறையில் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.