ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் தலைநகர் அமராவதியில் கட்டப்பட்ட அவரது வீடு மற்றும் "பிரஜா வேதிகா" கூட்ட அரங்கம் உள்ளிட்ட கட்டிடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என கூறி அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இடிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கட்டிடம் இடிக்கும் பணியை ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று தொடங்கின. இதில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீடும் இடிக்கப்பட்டது. மேலும் சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு செல்லும் சாலையும் அகற்றப்பட்டது. முன்னதாக "பிரஜா வேதிகா" இல்லத்தை இடிக்க தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் கிருஷ்ணா நதி அருகில் கட்டிடம் கட்டப்பட்டது சட்டவிரோதம் என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த கட்டிடம் கட்டப்பட்ட இடம் முந்தைய ஆட்சியின் போது 2 விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக வாங்கப்பட்ட நிலம் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்தார். மேலும் கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் இதே போல் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்றும் அவர் கூறினார். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசின் இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் வாடகைக்கு வீடு தேட தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.