ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம் உள்ளிட்டவை அம்மாநில மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல் அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் தலைநகர் அமராவதியில் கட்டப்பட்ட "பிரஜா வேதிகா" இல்லத்தை இடிக்க உத்தரவிட்டார். இது குறித்து விளக்கம் அளித்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த கட்டிடம் சட்டவிரோதமாகவும், சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டது.
அதனால் தான் இடிக்க உத்தரவிட்டேன் என தெரிவித்தார். மேலும் இது போன்ற சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் தொடரும் என கூறினார். முதல்வர் ஜெகன் உத்தரவை அடுத்து "பிரஜா வேதிகா" இல்லத்தை பொது பணித்துறை அதிகாரிகள் பிடித்தனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக பண மோசடி வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சீனிவாச காந்தி மீது துறை ரீதியிலாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார் முதல்வர் ஜெகன். சீனிவாச காந்தி தற்போது ஐதராபாத்தில் இருக்கும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தடுப்புப்பிரிவில் பணியாற்றி வருகிறார். தந்தை மறைவுக்கு பின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ஜெகன் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தார். இதில் முக்கியமானது பண மோசடி வழக்கு. இந்த வழக்கு தொடர்பான சோதனையின் போது தன்னை வேட்டையாடுவதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் கூறினார்.
இதில் தெலுங்கு தேசம் கட்சியின் உதவியோடு தங்கள் குடும்பத்தினர் மீதும், தன் மீதும் அமலாக்கத்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது எனவும், பழிவாங்கவே தங்கள் மீது வீண் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து சீனிவாச காந்திக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐதராபாத்திலும், விஜயவாடாவிலும் அதிகாரிகள் சோதனை நடத்தின. இதில் கணக்கில் வராத ரூபாய் 3 கோடி 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் சீனிவாச காந்தி, அவரது மனைவி, மகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.