இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியானது. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கான சூழல் நிலவுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் 16 மக்களவைத் தொகுதிகளை வென்ற தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரில் 12 மக்களவைத் தொகுதிகளை வென்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும், தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த தேர்தலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக உள்ளார். அதில் சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணியினர் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது.
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிலையில், இன்று (05-06-24) பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.கவிடம் பல நிபந்தனை விதிக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இருவரும் விதித்த நிபந்தனைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதில், மூன்றுக்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்கள் பதவியைத் தெலுங்கு தேசம் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அறிவிக்க வேண்டும் என்றும், போலாவரம் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு பா.ஜ.கவிடம் கோரிக்கை வைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என்றும், கோரிக்கை வைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.