
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தற்போது குறைந்து வருகிறது. இருப்பினும் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என சில நிபுணர்களும், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சில நிபுணர்களும் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் மேகாலயா மாநிலத்தில் அரசாங்க புள்ளி விவரப்படி, கடந்த வருடம் கரோனா பரவல் தொடங்கியது முதல் இன்றுவரை 0-14 வயதிற்குள்ளான 5,101 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,344 குழந்தைகள் குணமடைந்துவிட்ட நிலையில், 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் 13 குழந்தைகள் கடந்த ஒரு மாதத்தில் இறந்துள்ளனர்.
30 நாட்களில் 13 குழந்தைகள் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு அதிகமாக கரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பட்டது. கேள்விக்கு பதிலளித்த அவர், "குழந்தைகளிடையே இருக்கும் கரோனா பாசிட்டிவிட்டி ரேட் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். நிலைமையைச் சமாளிக்க மூன்று குழந்தைகள் மருத்துவமனைகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எதிர்பார்க்கப்படும் மூன்றாவது அலை மேகாலயாவைத் தாக்கும் முன் நாங்கள் தயாராக இருக்க முயற்சி எடுத்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.