ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி கடந்த மாதம் பதவியேற்றார். அப்போது அவருடன் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சரவை பதவியேற்கவில்லை. இந்த நிலையில் ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து விவாதிக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அமராவதியில் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் 25 அமைச்சர்கள் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு 5 துணை முதல்வர்களை நியமிப்பது என்ற முடிவை ஜெகன் அறிவித்தார்.
இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஜெகன் மோகனின் நடவடிக்கையை கண்டு வியந்து போனார்கள். இந்தியாவிலேயே அதிக துணை முதல்வர்கள் கொண்ட மாநிலமாக ஆந்திர மாநிலம் மாறுகிறது. அதே போல் கூட்டத்தில் ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் எனவும், தற்காலிக சபாநாயகர் சம்பங்கி அப்பள நாயுடு, ஆந்திரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். ஜூன் 13 ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் ஜூன்- 14 ஆம் தேதி ஆளுநர் நரசிம்மன் உரையுடன் தொடங்கும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதிய அமைச்சரவை பதவியேற்பு:
ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் 25 பேர் கொண்ட பட்டியலையும், 5 துணை முதல்வர்கள் கொண்ட பெயர் பட்டியலை முதல்வர் ஜெகன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா கூட்டு ஆளுநர் நரசிம்மனை நேரில் சந்தித்து வழங்கினார். இதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று காலை 11.49 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஆளுநர் நரசிம்மன் அமைச்சர்களாக பதவியேற்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் விழாவில் ஆந்திர மாநில முதலவர் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் பங்கேற்கின்றனர். இந்த அமைச்சரவையில் நகரி சட்டமன்ற உறுப்பினர் நடிகை ரோஜா இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.