
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான குமரி அனந்தன் (93) காலமானார். குமரி அனந்தன் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்த்குமாரின் சகோதரும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும் ஆவார். சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனிற்றி நள்ளிரவு 12:30 மணிக்கு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நான்காம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை நாடாளுமன்ற எம்பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குமரி ஆனந்தன்.
குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து உருக்கமாக பேசுகையில், ''சுமார் 12:30 மணிக்கு தனது கடைசி மூச்சை தமிழ் மண்ணில் விட்டார்கள். அவர்களை பொறுத்த மட்டில் அரசியலில் ஒரு நேர்மையான, அரசியல் துணிச்சலான அரசியல் கொள்கை பிடிப்பு உள்ளவர். அரசியலில் காமராஜரின் தொண்டன் என்பதுதான் எனது மிகப்பெரிய அடையாளம் என்று எப்பொழுதுமே சொல்லிக் கொண்டிருப்பார். தந்தை என்று இருந்ததை விட நாட்டிற்கு தொண்டன் என்ற வகையிலேயே அவர் வாழ்க்கை இருந்தது. உங்கள் அனைவரின் சார்பிலும் உங்கள் சகோதரியாக அவரை ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிராத்தித்து கொள்கிறேன்.
நான் வேறு இயக்கத்தில் பயணித்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்தியவர். தமிழக மக்களுக்கு எனது தந்தை செய்ய நினைத்ததை நாங்கள் செய்து முடிப்போம். அப்பாவை இழந்து தவித்து வருகிறேன் 'போய் வாருங்கள் அப்பா' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.