வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைமைச் செயலாளராக ஜிதேந்திர நரேன் பணியாற்றியபோது இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனது கூட்டாளிகளான சந்தீப் சிங், தொழில்துறை முன்னாள் இயக்குநர் ரிஷிஸ்வர் லால் ரிஷி ஹிரொருடன் சேர்ந்து கூட்டாக அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அப்பெண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீசில் புகார் அளித்தார். அப்போது ஜிதேந்திர நரேன் டெல்லியில் நிதித்துறை தலைவராகப் பணியாற்றினார். பாலியல் புகாரை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜிதேந்திர நரேன் உள்ளிட்ட சம்பந்தப்பட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மோனிகா பரத்வாஜ் தலைமையில் சிறப்பு குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை சாட்சியாக வைத்து 935 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.