புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று (21-09-23) தொடங்கி நடைபெற்றது.
இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி எம்.பி.களான கனிமொழி, தமிழச்சி பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்டோர் மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகளிருக்கான இட ஒதுக்கீடு 2029ஆம் ஆண்டுக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அமித்ஷா, “பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருப்பது இது ஐந்தாவது முறையாகும். முதல் முறையாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசு சார்பில் கடந்த 1996ஆம் ஆண்டில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த மசோதா காலாவதியானது. இரண்டாவது முறையாக வாஜ்பாய் தலைமையிலான அரசு கொண்டு வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. அதுவும் நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடைந்ததால் காலாவதியானது. இந்த நான்கு முறையும் பெண்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால், இந்த முறை மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும். இந்த மசோதாவில் குறைகள் ஏதேனும் இருந்தால், அதை பின்னர் நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் என்ற அச்சம் தேவை இல்லாதது. ஏனென்றால், 2024ஆம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் வரும் அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பையும், தொகுதி மறுவரையறைகளையும் உடனடியாக மேற்கொள்ளும். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறையை தொடங்கி வைக்கும். அந்த வகையில், மக்களவை மற்றும் மாநில சட்டசபையிலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு 2029ஆம் ஆண்டுக்கு பிறகு நடைமுறைக்கு வரும்” என்று கூறினார்.