நாடாளுமன்றத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக தொடங்கப்பட்ட வாக்குப்பதிவானது மே 25ஆம் தேதி வரை ஆறு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இறுதி கட்டமாக ஜூன் 1ஆம் தேதி மீதமுள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடைசி கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதில்லை. அனைத்து சர்ச்சைக்குரிய சட்டங்கள், பிரச்சினைகளான சட்டப்பிரிவு 370, சி.ஏ.ஏ குறித்து, எழுப்பப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதிலளித்தேன். விவாதங்களில் கலந்துகொண்டேன். ஆனால் எந்த விவாதமும் நடைபெறவில்லை. பாராளுமன்றம் மிகவும் கேவலமான முறையில் நடத்தப்படுகிறது என்று நான் வேதனைப்படுகிறேன்.
என்னுடைய கருத்துப்படி, ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியில் நுழைந்த பிறகுதான் காங்கிரஸின் நடத்தை மாறியது. அதன் பிறகுதான், அவர்களின் அரசியலின் தரம் வீழ்ச்சியடைந்தது. ஜனாதிபதியின் உரைக்கு பிரதமர் அளித்த பதிலில் தொடர்ந்து இடையூறு ஏற்படுவதை நான் இதுவரை பார்த்ததில்லை. நாட்டு மக்கள் அவருக்கு பிரதமர் என்ற ஆணையை வழங்கியதால் அவர் பிரதமரானார். அவர்கள் நரேந்திர மோடியை அவமதிக்கவில்லை, இந்திய அரசியலமைப்பை அவமரியாதை செய்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது” என்று கூறினார்.